நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் திடீர் தர்ணா


நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் திடீர் தர்ணா
x

வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் விவகாரம் தொடர்பாக நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாதியிலேயே கூட்டம் முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் விவகாரம் தொடர்பாக நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாதியிலேயே கூட்டம் முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேல்முறையீட்டு குழு தேர்தல்

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் ராஜாஜி கூட்ட அரங்கில் நேற்று காலை வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 9 உறுப்பினர்களை தேர்வு செய்ய தி.மு.க. சார்பில் 9 பேர் கொண்ட பட்டியலும் மாவட்ட தலைமையால் வெளியிடப்பட்டது.

ஆனால், இந்த பட்டியலை எதிர்த்து மேலும் 3 தி.மு.க. கவுன்சிலர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். 9 உறுப்பினர்கள் கொண்ட குழுவுக்கு, 12 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிட்டனர். இதில் தி.மு.க. அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட 3 பேரும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

மாநகராட்சி கூட்டம்

பரபரப்பாக தேர்தல் நடந்து முடிந்த பிறகு, மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேயர் சரவணன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், 'முதியோர் ஓய்வூதியத்தை ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்கியதற்கும், நெல்லை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசு அறிவிக்கப்பட்டு இருப்பதற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

பெயர் சூட்ட எதிர்ப்பு

தொடர்ந்து அவர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசும்போது, 'நெல்லை டவுன் ஆர்ச்சில் இருந்து குறுக்குத்துறை சாலை வரை உள்ள இணைப்பு சாலைக்கு தமிழ் பேச்சாளர் நெல்லை கண்ணன் பெயர் சூட்ட வேண்டும், புலமைபித்தன், தொ.பரமசிவன் ஆகியோருக்கு மேடை போலீஸ் நிலைய கோட்டையில் மார்பளவு சிலை நிறுவ வேண்டும்' என்றார்.

இதுதொடர்பாக கவுன்சிலர் சங்கர் பேசுகையில், 'மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து நெல்லை கண்ணன் தவறாக பேசி உள்ளார். அதனால் அவரது பெயரை சாலைக்கு சூட்டக்கூடாது' என்று கூறி தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என்றார். இதையடுத்து அந்த தீர்மானம் ரத்து செய்யப்படுவதாக மேயர் அறிவித்தார்.

திடீர் போராட்டம்

இதைத்தொடர்ந்து நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி எழுந்து, மேயர் பி.எம்.சரவணன், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோரை குற்றம்சாட்டி பேச தொடங்கினார். அப்ேபாது அவர், மாநகராட்சியின் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு வேட்பாளர்கள் அறிவிப்பு தொடர்பாக மேயர் அழைப்பின் பேரில் மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு சென்றபோது எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறினார். பின்னர் அவர் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருக்கு ஆதரவாக மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசில்லா, தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, கவுன்சிலர்கள் கோகுலவாணி, அனார்க்கலி ஆகியோரும் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் கவுன்சிலர்கள் ரவீந்தர், கிட்டு ராமகிருஷ்ணன், உலகநாதன், மாரியப்பன் உள்ளிட்டோரும் மேயர், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரின் செயல்பாடுகளை கண்டித்து கடுமையாக பேசினர். மேயருக்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பினர். இதனால் கூட்ட அரங்கம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

பாதியிலேயே முடிந்த கூட்டம்

அப்போது ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, 'வார்டு கோரிக்கைகள் தொடர்பாக மட்டும் இங்கு பேசுங்கள். அரசியல் பிரச்சினையை இங்கு பேசக்கூடாது. வெளியே சென்று பேசுங்கள்' என்று கூறினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூவும் கவுன்சிலர்களை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டார். ஆனால், கவுன்சிலர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஒன்றிணைந்து கோஷங்களும் எழுப்பினர்.

இதையடுத்து மாநகராட்சி கூட்டத்தை முடித்து வைப்பதாக கூறிவிட்டு மேயர் இருக்கையை விட்டு எழுந்து சென்றார். மேயரின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து கவுன்சிலர்கள் கோஷங்கள் எழுப்பியதுடன் கூட்ட அரங்கை விட்டு வெளியே செல்ல மாட்டோம் எனக்கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் கழித்து, மேயரை சந்தித்து பேசப்போவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். கவுன்சிலர்கள் போராட்டத்தை தொடர்ந்து மாநகராட்சி கூட்டம் பாதியிலேயே முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story