நீலகிரியில், மகளிர் உரிமைத்தொகை பெற 1¾ லட்சம் பேர் விண்ணப்பம்
நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற நடந்த 2 கட்ட முகாம்களில் 1¾ லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற நடந்த 2 கட்ட முகாம்களில் 1¾ லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
மகளிர் உரிமைத்தொகை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தில் உரிமைத்தொகை பெற 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். ரூ.2½ லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் தகுதி உள்ளவர்கள் ஆவர்.
நீலகிரி மாவட்டத்தில் 404 ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவம், டோக்கன் வழங்கப்பட்டது. விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்து குறிப்பிட்ட நாளில் முகாமுக்கு சென்று சமர்ப்பித்தனர். அந்த விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 24-ந் தேதி முதல் கடந்த 4-ந் தேதி வரை முதல் கட்ட முகாமும், கடந்த 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை இரண்டாம் கட்ட முகாமும் நடந்தது.
சிறப்பு முகாம்
முதல் கட்ட முகாமில் 91,926 பேரும், இரண்டாம் கட்ட முகாமில் 77,191 பேரும் என மொத்தம் 1,69,117 பேர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்து உள்ளனர். இந்த விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியும் நடந்து வருகிறது. இந்தநிலையில் 2 கட்டங்களாக நடந்த முகாமில் விண்ணப்பிக்காமல் விடுபட்ட பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, நேற்று முதல் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. பெண்கள் அந்தந்த பகுதிகளில் நடந்த முகாம்களில் கலந்துகொண்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். குன்னூரில் நடந்த சிறப்பு முகாமை ஆர்.டி.ஓ. பூஷணகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) உடன் முடிகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.