நீலகிரியில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம் - அதிகாரிகள் தகவல்
நீலகிரியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் தனிநபர், குழு கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊட்டி: நீலகிரியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் தனிநபர், குழு கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார முன்னேற்றம்
நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த தனிநபர் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக்கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொது காலக்கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவை மாடு கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது.விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்
பொது கால கடன் திட்டம்
ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொது கால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை. பெண்களுக்காக புதிய பொற்கால திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும்.
நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம் ஆகும். நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்கள் சுய உதவிக்குழுவிற்கு ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் ஆகும். நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.