நீலகிரியில், பேரிடர் கால இடர்பாடுகளை எதிர்கொள்ள 200 தன்னார்வலர்களுக்கு பயிற்சி
நீலகிரியில், பேரிடர் கால இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு 200 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி: நீலகிரியில், பேரிடர் கால இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு 200 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் காலம்
நீலகிரி மாவட்டத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் நவம்பர் வரை வடகிழக்கு பருவமழை மற்றும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும் பெய்கிறது. மலைப்பிரதேசம் என்பதால் மழைக்காலங்களில் வெள்ளம் அதிக அளவில் ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது.
அதேபோல் ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. மேலும் சாலையோரங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் ஏற்படுகிறது. இந்த பேரிடர் காலத்தில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தன்னார்வலர்களுக்கு பயிற்சி
இதற்கிடையே நீலகிரி மாவட்டம் மலை பிரதேசம் என்பதால் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இதனால் தீயணைப்புத்துறையினர் வர தாமதம் உண்டாகி மீட்பு பணியில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை சார்பில், தீயணைப்புத்துறையினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு பேரிடர் கால இடர்பாடுகளை எதிர்கொள்ள 200 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் இவர்கள், இயற்கை பேரிடர் உள்ளிட்ட அசம்பாவித நேரங்களில் தங்களையும் காத்து பொதுமக்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இதற்காக இவர்களுக்கு தனியாக அடையாள அட்டை, பயிற்சி முடித்த சான்றிதழ், பேரிடர் கால மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் மழையில் நனையாமல் இருக்க உடைகள், தலைக்கவசம், கையுறை போன்றவையும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பேரிடர் மேலாண்மை துறையினர் செய்துள்ளனர்.