பொதுமக்கள் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம்
திருச்செந்தூர் அருகே கிராமசபை கூட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றியதால் பொதுமக்கள் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே கிராமசபை கூட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றியதால் பொதுமக்கள் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமசபை கூட்டம் இடமாற்றம்
திருச்செந்தூர் அருகே மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்து அலுவலகம் நடுநாலுமூலைக்கிணறு கிராமத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மே தின கிராமசபை கூட்டம் நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஆண்டு மேதின கிராமசபை கூட்டம், மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்து நா.முத்ைதயாபுரத்தில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் கிராமசபை கூட்டத்ைத வழக்கம்போல் நடுநாலுமூலைக்கிணறு கிராமத்திலே நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது.
கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம்
இந்த நிலையில் நா.முத்தையாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கிராமசபை கூட்டத்தை நடத்துவதற்காக பஞ்சாயத்து துணைத்தலைவர் முருகன், வார்டு உறுப்பினர்கள் சுதா, சின்னத்துரை, வேல்கொடி, ரெட்சன் பிரபு மற்றும் பொதுமக்கள் வந்தனர். ஆனால் அங்கு நீண்ட நேரமாகியும், பஞ்சாயத்து தலைவர் மகராஜா மற்றும் அதிகாரிகள் வரவில்லை.
இதனால் பள்ளிக்கூட வளாகத்தில் திரண்டு இருந்த பஞ்சாயத்து துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கண்களில் கருப்புத்துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்துக்கு சென்று, வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கலரசியை சந்தித்து முறையிட்டனர். அப்போது அவர்கள், பஞ்சாயத்து தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக கூறி மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள், திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கும் சென்றும் மனு வழங்கினர்.
மற்றொரு இடத்தில்...
இதற்கிடையே நடுநாலுமூலைக்கிணறு கலையரங்கம் முன்பு கிராமசபை கூட்டம், பஞ்சாயத்து தலைவர் மகராஜா தலைமையில் நடந்தது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கலரசி, 2 வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் போதிய வார்டு உறுப்பினர்கள் பங்கேற்காததால் தீர்மானங்களை நிறைவேற்றவில்லை.