முன்னேற்றத்தை நாடும் வட்டாரம் திட்டத்தில்தோகைமலை ஊராட்சி ஒன்றியம் தேர்வு
முன்னேற்றத்தை நாடும் வட்டாரம் திட்டத்தில் தோகைமலை ஊராட்சி ஒன்றியம் கண்டறியப்பட்டுள்ளது
பிரதமர் நரேந்திர மோடியால் டெல்லியில் நிதி ஆயோக் மூலம் முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின்கீழ் நேற்று சங்கல்ப் சாப்டா' திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற காணொலி காட்சியில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட அளவிலான அலுவலர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். தோகைமலை ஊராட்சி ஒன்றியம் முன்னேற்றத்தை நாடும் வட்டாரம் திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டது. இந்தியா முழுவதும் 500 வட்டாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை வட்டாரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை மனிதவள குறியீடுகளின் படி வகைப்படுத்தப்பட்டு தோகைமலை ஊராட்சி வட்டாரத்தை முன்னேற்றத்தை நாடும் வட்டாரமாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்களுக்கு தேவையான சுகாதாரம், கல்வி, வேளாண்மை, நீர்பாசனம், ஊட்டச்சத்து, அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகள் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், வருகிற 3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தோகைமலை வட்டாரத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற உள்ள சங்கல்ப் சாப்டா நிகழ்ச்சிகளையும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறையினரும் சிறப்பாக நடத்திட வேண்டும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.