கோவில் வளாகத்தில் மனைவியை அடித்துக் கொன்றது ஏன்?-கைதான லாரி டிரைவர் வாக்குமூலம்


கோவில் வளாகத்தில் மனைவியை அடித்துக் கொன்றது ஏன்?-கைதான லாரி டிரைவர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 13 Feb 2023 6:45 PM GMT)

ஆலங்குளத்தில் கோவில் வளாகத்தில் மனைவியை அடித்துக் கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான லாரி டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளத்தில் கோவில் வளாகத்தில் மனைவியை அடித்துக் கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான லாரி டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மனைவி கொலை

ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45), லாரி டிரைவர். இவருடைய மனைவி சுமதி (40).

நேற்று முன்தினம் மாலையில் சுமதி ஆலங்குளம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு சென்றார். அப்போது, அங்கு கண்ணன் வந்தார். திடீரென்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் அருகில் கிடந்த கம்பியை எடுத்து சுமதியை தலையில் அடித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

வாக்குமூலம்

இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், எனக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்து வந்தது. இதனை அறிந்த சுமதி என்னிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்தார். மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டதால் என்னை வீட்டிற்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால் நான் வீட்டிற்கு செல்லவில்லை.

சிறையில் அடைப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சுமதி கோவிலுக்கு சென்றதை அறிந்த நான் அங்கு சென்று மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர் தகாத வார்த்தைகளால் என்னை திட்டி மன்னிக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருகில் கிடந்த ஊஞ்சல் கம்பியை எடுத்து சுமதி தலையில் அடித்துக் கொலை செய்தேன். இவ்வாறு வாக்குமூலத்தில் கண்ணன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கண்ணனை போலீசார் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story