உத்திரரங்கநாதர் கோவிலில் இன்று ராஜகோபுரத்துக்கு பாலாலயம்


உத்திரரங்கநாதர் கோவிலில் இன்று ராஜகோபுரத்துக்கு பாலாலயம்
x
தினத்தந்தி 3 Sep 2023 11:30 AM GMT (Updated: 3 Sep 2023 11:30 AM GMT)

பள்ளிகொண்டா உத்திரரங்கநாதர் கோவிலில் இன்று ராஜகோபுரத்துக்கு பாலாலயம் நடக்கிறது.

வேலூர்

அணைக்கட்டு, செப்.3-

பள்ளிகொண்டா உத்திரரங்கநாதர் கோவிலில் இன்று ராஜகோபுரத்துக்கு பாலாலயம் நடக்கிறது.

பள்ளிகொண்டாவில் உள்ள பிரசித்தி பெற்ற அரங்கநாயகி சமேத உத்திர ரங்கநாத சுவாமி கோவில், 1500 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழம்பெருமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் கடைசியாக 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகளான நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டது. உள்ளது. அதன்படி, கோயில் ராஜகோபுரத்துக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாலாலயம் நடக்கிறது.

இதையொட்டி, நேற்று மாலை 6 மணிக்கு ஆச்சார்ய வர்ணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, ஹோமம், திருப்பல்லாண்டு ஆகியவை நடந்தது. தொடர்ந்து, காலை யாகசாலை ஆரம்பம், ராஜகோபுர பாலாலய பிரதிஷ்டை, திவ்ய பிரபந்தம் சேவை, பூர்ணாஹூதி, சாற்று முறை உள்ளிட்டவை நடக்க உள்ளது.

இதன்காரணமாக கும்பாபிஷேகம் நடக்கும் வரைக்கும், கோவிலை விட்டு வெளியே உற்சவர் புறப்பாடு நடக்காது. அதேநேரம், கோவிலில் மூலவர் மற்றும் உற்சவரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும், 2025-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்துக்குள்ளாக திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு கும்பாபிஷேகத்துக்கான தேதி இறுதி செய்யப்பட்டதும், மூலவருக்கு பாலாலயம் செய்யப்படும்.

அப்போது, 45 நாட்களுக்கு மட்டும் கோவிலில் தரிசனம் முழுவதுமாக நிறுத்தப்பட உள்ளது என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story