வருசநாடு கிராமத்தில்விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
வருசநாட்டில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இலவம் பஞ்சு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் விலை மிகவும் குறைந்துள்ளது. தற்போது ரூ.50 வரை மட்டுமே இலவம் பஞ்சு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் இலவம் பஞ்சு காய்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டுள்ளனர்.
இதேபோல கடந்த 3 ஆண்டுகளாக கொட்டை முந்திரியின் விளையும் குறைந்தே காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று வருசநாடு கிராமத்தில் விவசாயிகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் ராஜப்பன் தலைமை தாங்கினார். விவசாய சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், இலவம் பஞ்சு 1 கிலோ ரூ.110, கொட்டை முந்திரி 1 கிலோ ரூ.120 ரூபாய் என அரசு விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, வருகிற 24-ந்தேதி கடமலை-மயிலை ஒன்றிய விவசாயிகள் தேனி மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப் போவதாக முடிவு செய்யப்பட்டது.