கடமலைக்குண்டு, வருசநாடு கிராமங்களில் சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை


கடமலைக்குண்டு, வருசநாடு கிராமங்களில்  சேதமடைந்த தடுப்பணைகளை  சீரமைக்க வேண்டும்:  விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 20 Dec 2022 6:45 PM GMT (Updated: 20 Dec 2022 6:46 PM GMT)

கடமலைக்குண்டு, வருசநாடு கிராமங்களில் சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தேனி


மூலவைகை ஆறு

கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியில் மூலவைகை ஆற்றின் குறுக்கே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்றது. பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தடுப்பணை கட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது வரை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து காணப்படுகிறது.

இதன்காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுப்பணை கட்டும் பணிகளை தொடங்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது தடுப்பணையின் முன்பகுதி சேதமடைந்தது. தற்போது இந்த சேதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் தடுப்பணை மேலும் சேதமடையும் அபாயம் உள்ளது.

தடுப்பணை சேதம்

வருசநாடு அருகே மொட்டைபாறை மலை அடிவாரத்தில் மூல வைகை ஆற்றில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை கட்டப்பட்ட பின்பு வருசநாடு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கோடை காலங்களில் கூட வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது. மேலும் விவசாயமும் செழித்து காணப்பட்டது.

இந்த நிலையில் தடுப்பணை கட்டப்பட்ட பின்பு அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை. அதன்காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூல வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தடுப்பணை சேதமடைந்தது. இதனை சீரமைக்காததால் அடுத்தடுத்து மூல வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தடுப்பணை முற்றிலுமாக சேதமடைந்து போனது.

இதனால் வருசநாடு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மேலும் தடுப்பணை உடைந்ததால் அந்த பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு கரையோரங்களில் உள்ள தென்னை மரங்கள் கீழே சாய்ந்து வருகிறது. எனவே மேற்கண்ட 2 தடுப்பணைகளையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story