வாளியில் இருந்த தண்ணீரில் தவறி விழுந்து குழந்தை சாவு


வாளியில் இருந்த தண்ணீரில்  தவறி விழுந்து குழந்தை சாவு
x

விளாத்திகுளம் அருகே வாளியில் இருந்த தண்ணீரில் தவறி விழுந்து குழந்தை பரிதாபமாக இறந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே பிளாஸ்டிக் வாளியில் இருந்த தண்ணீரில் தவறி விழுந்து ஒரு வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

ஒரு வயது பெண் குழந்தை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் மாரிப்பாண்டியன். இவர் சென்னையில் உள்ள சுவீட் கடையில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மாரித்தாய். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 3-வது மகள் மகாலட்சுமி (வயது 1).

நேற்று முன்தினம் மாலை மாரித்தாய் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். குழந்தை மகாலட்சுமி விளையாடிக் கொண்டிருந்தது. மூத்த பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கூடம் சென்று வந்திருந்தனர்.

வாளியில் தவறி விழுந்தது

சிறிது நேரம் கழித்து குழந்தை மகாலட்சுமியை காணவில்லை. அவள் அக்காள்களுடன் விளையாட சென்று இருக்கலாம் என்று கருதி மாரித்தாய் இருந்து விட்டார். இந்த நிலையில் அவர் தற்செயலாக வெளியே வந்தபோது குளியலறை அருகில் இருந்த பிளாஸ்டிக் வாளியில் உள்ள தண்ணீரில் குழந்தை மகாலட்சுமி தலைகுப்புற விழுந்து கிடந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாரித்தாய் அலறியடித்துக் கொண்டு ஓடிப்போய் குழந்தையை தூக்கினார். குழந்தை பேச்சு மூச்சின்றி இருந்ததை பார்த்து கதறி அழுதார்.

பரிதாப சாவு

இதையடுத்து அவரும், அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து குழந்தையை தூக்கிக்கொண்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை மகாலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளாஸ்டிக் வாளியில் இருந்த தண்ணீரில் தவறி விழுந்து குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story