தேனி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள்-உறவினர்களின் 238 வங்கி கணக்குகள் முடக்கம்


தேனி மாவட்டத்தில்  கஞ்சா வியாபாரிகள்-உறவினர்களின் 238 வங்கி கணக்குகள் முடக்கம்
x

தேனி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்களின் 238 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்தார்.

தேனி

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆகியோர் உத்தரவின்பேரில், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் கஞ்சா, புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

கஞ்சா அதிரடி வேட்டையின் ஓர் அங்கமாக கஞ்சா குற்றவாளிகள் 432 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 258 பேர் மீது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடம் கஞ்சா விற்பனையில் ஈடுபடக்கூடாது என்று பிணைபத்திரம் பெறப்பட்டது. அவ்வாறு பிணைபத்திரத்தை மீறி தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாவட்டத்தில் இதுவரை கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கஞ்சா வழக்கில் கைதானவர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் 238 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story