தேனி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 3,787 பேர் எழுதினர்


தேனி மாவட்டத்தில்  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 3,787 பேர் எழுதினர்
x

தேனி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 3,787 பேர் எழுதினர்.

தேனி

சப்-இன்ஸ்பெக்டர் பணி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழகத்தில் 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்தது. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 4 ஆயிரத்து 522 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு இருந்தது.

இதற்காக தேனி மேரிமாதா மெட்ரிக் பள்ளி, முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தலா ஒரு தேர்வு மையம், கொடுவிலார்பட்டி கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் 3 மையங்கள் என மொத்தம் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த மையங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 787 பேர் தேர்வு எழுதினர்.

735 பேர் எழுதவில்லை

தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 735 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு அறைகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் 550-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் காலை 8 மணிக்கே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். தேர்வு அறைக்கு செல்போன், கால்குலேட்டர் போன்ற பொருட்கள் எதுவும் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. பேனா, ஹால்டிக்கெட் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனால், தேர்வு எழுத வந்தவர்கள் மைய நுழைவு வாயிலில், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஏ.டி.ஜி.பி. ஆய்வு

இந்த தேர்வு மையங்களில் போலீஸ் துறை செயலாக்கப்பிரிவு ஏ.டி.ஜி.பி. பாலநாகதேவி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவின் உமேஷ் டோங்கரே ஆகியோர் ஆய்வு செய்து தேர்வு நடைமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர். தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் 'சீல்' வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் தேர்வு மையங்களில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டன.


Next Story