தேனி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 94.39 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
தேனி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 94.39 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். 787 பேர் தோல்வி அடைந்தனர்.
94.39 சதவீதம் தேர்ச்சி
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு கடந்த மாதம் நடந்தது. இந்த தேர்வு முடிவுக்காக மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு காத்திருந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டது. அந்தந்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மேலும் மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. இதன் மூலம் மாணவ, மாணவிகள் பலரும் தங்களின் வீட்டில் இருந்தபடியே தேர்வு முடிவை அறிந்து கொண்டனர். சில மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிக்கு சென்று தேர்வு முடிவை தெரிந்து கொண்டனர்.
பிளஸ்-2 தேர்வை பொறுத்தவரை தேனி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 90 மாணவர்கள், 6 ஆயிரத்து 943 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 33 பேர் எழுதினர். அவர்களில் 6 ஆயிரத்து 503 மாணவர்கள், 6 ஆயிரத்து 743 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 246 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.39 சதவீத தேர்ச்சி ஆகும். அதுபோல், மாணவர்கள் தேர்ச்சி 91.72 சதவீதம், மாணவிகள் தேர்ச்சி 97.12 சதவீதம் என வழக்கம்போல், மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அளவில் பிளஸ்-2 தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் தேனி மாவட்டம் 18-வது இடத்தை பிடித்தது.
787 பேர் தோல்வி
தேனி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 787 பேர் தோல்வி அடைந்தனர். மேலும், மாவட்டத்தில் 59 அரசு பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 65 மாணவ, மாணவிகள் இந்த தேர்வு எழுதினர். அவர்களில் 4 ஆயிரத்து 590 பேர் தேர்ச்சி பெற்றனர். அதன்படி அரசு பள்ளிகளின் தேர்ச்சி 90.62 சதவீதம் ஆகும்.
மாவட்டத்தில் பார்வையற்ற மாணவ, மாணவிகள் 9 பேர், வாய்பேச முடியாத மற்றும் காது கேளாதோர் 3 பேர் உள்பட 40 மாற்றுத்திறனாளிகள் இந்த தேர்வு எழுதினர். அவர்களில் 39 பேர் தேர்ச்சி பெற்றனர்.