தேனி மாவட்டத்தில்மீண்டும் கொரோனா பாதிப்பு; 11 பேருக்கு வீடுகளில் சிகிச்சை
தேனி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 11 பேருக்கு வீடுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. பின்னர் உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவியது. இந்தியாவில் 2020, 2021-ம் ஆண்டுகளில் இந்த வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது. பின்னர் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்தும் பணிகளின் காரணமாக இந்த வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் 4 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதியானது. கடந்த 2 வார காலத்தில் மட்டும் மாவட்டத்தில் 11 பேருக்கு பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. பாதிப்பு உறுதியானவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீண்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், இந்த வைரஸ் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.