தேனி மாவட்டத்தில்வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு


தேனி மாவட்டத்தில்வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 4 March 2023 6:45 PM GMT (Updated: 4 March 2023 6:47 PM GMT)

தேனி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

தேனி

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் தேனி மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு திட்டப்பணிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தனர். போடி நகராட்சியில் குடிநீர் திட்டப்பணிகள், தேவாரம் பேரூராட்சியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி, கம்பம் மார்க்கெட், கடமலைக்குண்டுவில் கூட்டுக் குடிநீர் திட்டம், தென்கரை பேரூராட்சிக்கான குடிநீர் திட்டம் ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வரும் தண்ணீரை லோயர்கேம்ப் குருவனூற்றுப்பாலம் அருகே வண்ணான்துறை பகுதியில் தடுப்பணை கட்டி அங்கிருந்து மதுரைக்கு குழாய் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். மேலும் வண்ணான்துறை பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தனர். மேலும் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகள் மற்றும் கொட்டப்படடி கண்மாயில் நடைபெறும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் திட்டப் பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story