தேனி மாவட்டத்தில்வெங்காய ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் :குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


தேனி மாவட்டத்தில்வெங்காய ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் :குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் வெங்காய ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தேனி

குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உத்தமபாளையம் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவில் இருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர்.

அதன்படி, கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

முல்லைப் பெரியாறு அணை மூலமாக. 5 மாவட்டங்கள் பயன்படுகின்றன. ஆனால் ஆக்கிரமிப்பு காரணமாக முல்லைப்பெரியாறு செல்லும் பாதை குறுகலாகி வருகிறது. ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெங்காய ஆராய்ச்சி மையம்

மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்திலும் வனப்பகுதியில் காடடு்த்தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இதனை தடுக்க வேண்டிய வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே கோடை காலங்களுக்கு முன்பும் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தேனி மாவட்டத்தில் வெங்காயம் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் எந்த ரகம் என்று தெரியாமல் பயிரிடுகின்றனர். அதற்கு உரிய விலை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இதனால் ஏற்றுமதி தரம் வாய்ந்த வெங்காயத்தை உற்பத்தி செய்வதற்கு இங்கு ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.

விரைவில் நடவடிக்கை

மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கண்மாய், குளங்களில் கரம்பை மண் அள்ளுவதற்கு விவசாயிகளுக்கு இலவசமாக அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இதனை முறைகேடாக பயன்படுத்துகிற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதற்காக தனி தாசில்தாரை நியமித்து ஒவ்வொரு குளம், கண்மாய்களையும் கண்காணிக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து பேசிய கலெக்டர் தங்கள் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். கூட்டத்தில், விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story