தேனி மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று


தேனி மாவட்டத்தில்  மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
x

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி

கொரோனா பரவல்

தேனி மாவட்டத்தில் கொரோனா முதல் 2 அலைகளின் தாக்கம் அதிகமாக இருந்தது. முதல் அலையை காட்டிலும் 2-வது அலையில் உயிரிழப்புகள் அதிக அளவில் இருந்தது. பின்னர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கொரோனா பரவல் இல்லாத மாவட்டமாக தேனி மாறியது. தொடர்ந்து 4 மாத காலம் தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த வாரம் மீண்டும் கொரோனா பரவ தொடங்கியது. கடந்த ஒரு வார காலமாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

42 பேருக்கு சிகிச்சை

மாவட்டத்தில் இன்று 165 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதனால், மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் கடைபிடிக்கப்படாத நிலைமை உள்ளது.

முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை மக்கள் மறந்து விட்டார்களோ என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து மக்களும், அரசு அலுவலர்களும் விலகி நிற்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தி, கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், தொற்று மேலும் பரவாமல் தடுக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவும் முன்வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story