தேனி மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி அமாவாசையையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை
தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி ஆண்டிப்பட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சித்திரை திருவிழா, ஆடி அமாவாசை உள்ளிட்ட நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசையையொட்டி மாவூற்று வேலப்பர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் வேலப்பர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அரோகரா என்ற கோஷத்துடன் தரிசனம் செய்தனர். இதையொட்டி ராஜதானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆண்டிப்பட்டி நகரில் மேற்கு ஓடை தெருவில் அமைந்துள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயா் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு அலங்காரம்
இதேபோல் மீனாட்சி அம்மன் கோவில், தர்மசாஸ்தா கோவில், கதலிநரசிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். போடி அருகே உள்ள கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலில் நடந்த பூைஜயில் சிவ பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதில் பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடும்பாறை அருகே உப்புத்துறை கிராமத்தில் மாளிகைபாறை கருப்பசாமி கோவில்கள் அமைந்துள்ளது. இங்கு ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி கருப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் மதுபாட்டில்களை கருப்பசாமிக்கு படைத்து வழிபட்டனர். விழாவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி தேனியில் இருந்து உப்புத்துறைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேனி பங்களாமேட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வார் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். தேனி சடையால் முனீஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசை விழா நடந்தது. முனீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். தேனி கணேச கந்தபெருமாள் கோவில், பெத்தாட்சி விநாயகர் கோவில், மேலப்பேட்டை பத்திரகாளியம்மன் கோவில், சந்தை மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.