தேனி மாவட்டத்தில்உலக வங்கி குழு உறுப்பினர்கள் ஆய்வு
தேனி மாவட்டத்தில் உலக வங்கி குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
உலக வங்கி குழு உறுப்பினர்கள்
உலக வங்கி நிதி உதவியுடன் நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் 2 உப வடிநில பகுதிகளில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் எந்திரங்கள் மற்றும் நவீன முறையில் விற்பனைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்காக ரூ.1 கோடியே 20 லட்சம் ஒதுக்கப்பட்டன.
சுருளியாறு உபவடிநில பகுதியில் உத்தமபாளையம் தாலுகாவில் ஒரு அணைக்கட்டு மற்றும் 3 வரத்து கால்வாய்கள், தேனி தாலுகாவில் தடுப்பணைகள் மற்றும் 4 வரத்து கால்வாய்கள் புனரமைக்கும் பணிகளுக்காக ரூ.6 கோடியே 30 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதேபோல், சுருளியாறு சத்திரப்பட்டி அணையில் ரூ.24 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சத்திரப்பட்டி தடுப்பணை
இந்நிலையில் உலக வங்கி நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக உலக வங்கியின் குழு உறுப்பினரும், மூத்த வேளாண் வணிக நிபுணருமான பர்போட் யூசேபி, உலக வங்கி உறுப்பினரும் வேளாண்மை மதிப்பு சங்கிலிகள் மற்றும் பகுப்பாய்வு ஆலோசகருமான ஹம்மத் பட்டேல் ஆகியோர் தேனிக்கு நேற்று வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். கூட்டத்தில் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர், உலக வங்கி குழு உறுப்பினர்கள் பர்போட் யூசேபி, ஹம்மத் பட்டேல், மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆகியோர் வீரபாண்டியில், உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு வழங்கப்பட்ட ரூ.60 லட்சம் நிதியின் மூலம் பொது சேவை மையம், உள்ளீட்டு கடை, மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் மற்றும் விவசாய குழுக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் போன்றவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பிறகு, சத்திரப்பட்டி தடுப்பணை புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, வேளாண்மை ஆலோசகர் ஷாஜகான், தோட்டக்கலைத்துறை ஆலோசகர் வித்யாசாகர், வேளாண் வணிக ஆலோசகர் ராஜசேகரன், வேளாண்மை இணை இயக்குனர் சங்கர் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.