தியாகராஜர் கோவிலில் பாத தரிசனம் நிகழ்ச்சி
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடந்த பாததரிசனம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடந்த பாததரிசனம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தியாகராஜர் கோவில்
பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோவில். சைவ சமயத்தின் தலைமை பீடமாக திகழும் இந்த கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆழித்தேரோட்டம் மிகவும் சிறப்பாக நடப்பது வழக்கம். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை திருவாரூர் ஆழித்தேர் பெற்று உள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் இந்திர விமானம், பூதவாகனம், வெள்ளி யானை வாகனம், வெள்ளி காளை வாகனங்களில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், சந்திரசேகரர், அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் கடந்த 1-ந் தேதி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பாத தரிசனம்
நேற்று முன்தினம் பங்குனி உத்திர விழாவையொட்டி நடராஜர், பஞ்சமூர்த்திகள், சந்திரசேகர சாமி தீர்த்த வாரி நடந்தது. ஆண்டு தோறும் தியாகராஜர் கோவிலில் மார்கழி, பங்குனி மாதத்தில் பாத தரிசனம் நிகழ்ச்சி விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன் படி நேற்று காலை 6 மணிக்கு தியாகராஜர், பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து பாத தரிசனம் காண பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அழகிய மணாளன், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.