தூத்துக்குடி மாவட்டத்தில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


தூத்துக்குடி மாவட்டத்தில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கொலை வழக்கு

குரும்பூர் அருகே உள்ள சோனகன் விளையை சேர்ந்த சுடலைமணி (வயது 48) என்பவர், அவரது தந்தையை கொலை செய்ததாக குரும்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். எப்போதும்வென்றான் சோழபுரத்தை சேர்ந்த அய்யாபிள்ளை மகன் ரவிச்சந்திரன் (36) என்பவரை ஒரு கொலை வழக்கில் தட்டப்பாறை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி திரேஸ்புரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அண்ணாத்துரை மகன் சின்னத்தம்பி என்ற லம்பா (26), கலைஞர் நகரை சேர்ந்த முத்து மகன் கருப்பசாமி என்ற ஓட்டை (21) ஆகிய 2 பேரையும் ஒரு கொலை வழக்கில் வடபாகம் போலீசார் கைது செய்தனர். களக்காடு பெருமாள்புரத்தை சேசர்ந்த ஆல்வின் மகன் ஜான்சன் என்ற ஜான் (37) என்பவரை ஒரு கொலை வழக்கில் சிப்காட் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

குண்டர் சட்டம்

இந்த நிலையில் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சுடலைமணி, ரவிச்சந்திரன், சின்னதம்பிஎன்ற லம்பா, கருப்பசாமி என்ற ஓட்டை, ஜான்சன் என்ற ஜான் ஆகிய 5 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.

நடப்பு ஆண்டில் இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 28 பேர் உட்பட 124 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story