தூத்துக்குடி இளைஞர் நீதி குழுமத்தில்வழக்குகளை விரைந்து முடிக்க போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
தூத்துக்குடி இளைஞர் நீதி குழுமத்தில் வழக்குகளை விரைந்து முடிக்க போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்நடந்தது.
தூத்துக்குடி இளைஞர் நீதிக்குழுமத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்த ேபாலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இளைஞர் நீதிக்குழுமம்
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி கடந்த 2019-ம் ஆண்டு குழந்தைகள் காணாமல் போன வழக்குகள் மற்றும் போக்சோ வழக்குகளில் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு உதவியாகவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீட்டு தொகை பெற்று தருவதற்கும், குற்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாளுவதற்காகவும் குழந்தைகள் நல காவல் அலுவலர் என்ற குழு ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் உருவாக்கப்பட்டது. அதில் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் குழந்தைகள் நல காவல் அலுவலர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் தூத்துக்குடி இளைஞர் நீதி குழுமத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து அனைத்து போலீஸ் துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி இளைஞர் நீதி குழுமம் முதன்மை நடுவர் குபேந்திர சுந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு சிறார் காவல் அலகின் பொறுப்பு அதிகாரியும் மாவட்ட குற்றப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுமான ஜெயராம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்தும், இளஞ்சிறார்களை கையாளுவது குறித்தும் போலீசாருக்கு இளைஞர் நீதி குழுமத்தின் முதன்மை நடுவர் ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டத்தில் கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாவதி, தூத்துக்குடி இளைஞர் நல நீதி குழுத்தின் உறுப்பினர்கள் ஜான் சுரேஷ், உமா தேவி மற்றும் நன்னடத்தை அதிகாரி முருகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.