தூத்துக்குடியில் மதுபோதையில் தண்டவாளத்தில் தூங்கிய 2 பேர் ரெயிலில் அடிபட்டு சாவு
தூத்துக்குடியில் மதுபோதையில் தண்டவாளத்தில் தூங்கிய 2 பேர் ரெயிலில் அடிபட்டு பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மதுபோதையில் தண்டவாளத்தில் தூங்கிய 2 பேர் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
திருமண வரவேற்புக்கு சென்ற நண்பர்கள்
நெல்லை மாவட்டம் பணகுடி தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் குழந்தை துரை. இவருடைய மகன் ஜெபசிங் (வயது 27). இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார்.
அங்கு தனது நண்பர்களான தூத்துக்குடி திரு.வி.க.நகர் 3-வது தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் மாரிமுத்து (வயது 23), தூத்துக்குடி 3-வது மைல் பசும்பொன் நகரைச் சேர்ந்த காளிப்பாண்டியன் மகன் மற்றொரு மாரிமுத்து (23) ஆகியோரை சந்தித்தார்.
இவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் ஜெயிலில் இருந்தபோது ஏற்பட்ட பழக்கத்தால் நண்பர்களாகி உள்ளனர்.
தண்டவாளத்தில் மது அருந்தியபோது...
இரவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், தூத்துக்குடி 3-வது மைல் ரெயில்வே பாலத்துக்கு கீழே தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மீளவிட்டான் செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தினர்.
பின்னர் மது போதையில் 3 பேரும் ரெயில் தண்டவாளத்திலேயே படுத்து தூங்கினர். மாரிமுத்து, மற்றொரு மாரிமுத்து ஆகிய 2 பேரும் தண்டவாளத்தின் குறுக்காக படுத்து தூங்கினர். ஜெபசிங், தண்டவாளத்தின் நடுவில் நீளவாக்கில் படுத்து தூங்கினார்.
ரெயிலில் அடிபட்டு 2 பேர் சாவு
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து லோடு ஏற்றிய சரக்கு ரெயில், ஆந்திர மாநிலம் நூஸ்வித் ரெயில் நிலையத்துக்கு புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் தூத்துக்குடி 3-வது மைல் ரெயில்வே பாலம் பகுதியில் சென்றபோது, அங்கு தண்டவாளத்தில் தூங்கிய மாரிமுத்து, மற்றொரு மாரிமுத்து, ஜெபசிங் ஆகிய 3 பேர் மீதும் பயங்கரமாக மோதியது.
இதில் தண்டவாளத்தின் குறுக்காக தூங்கிய மாரிமுத்து, மற்றொரு மாரிமுத்து ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை
தண்டவாளத்தின் நடுவில் நீளவாக்கில் தூங்கிய ஜெபசிங் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். தனது நண்பர்கள் 2 பேரும் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், பக்கத்து தெருவுக்கு சென்று நண்பர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து ஜெபசிங்கை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரெயில் மோதி இறந்த மாரிமுத்து, மற்றொரு மாரிமுத்து ஆகிய 2 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானவர்
ரெயில் மோதி இறந்த மாரிமுத்து மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதான அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
இதேபோன்று மற்றொரு மாரிமுத்து மீது 2 வழிப்பறி வழக்குகளும், ஜெபசிங் மீது கொலை வழக்கும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தூத்துக்குடியில் ரெயில் மோதி 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.