காட்டெருமை தூக்கி வீசியதில் 2 பேர் படுகாயம்


காட்டெருமை தூக்கி வீசியதில்  2 பேர் படுகாயம்
x

கொடைக்கானலில், பட்டப்பகலில் உலா வந்த காட்டெருமை தூக்கி வீசியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

கம்பீரமாக வலம் வந்த காட்டெருமை

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல், இதயத்தை வருடும் இதமான வானிலைக்கு மட்டும் பிரசித்தி பெற்றது அல்ல. அங்கு மிரள வைக்கும் வனவிலங்குகளுக்கும் பஞ்சம் இல்லை.

கொடைக்கானல் நகருக்குள் அவ்வப்போது வனவிலங்குகள் வலம் வருவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில், வனப்பகுதியில் இருந்து காட்டெருமைகள் அடிக்கடி குடியிருப்புக்குள் நுழைந்து பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில் கொடைக்கானல் நகரின் முக்கிய பகுதியாக திகழும் 7 ரோடு சந்திப்பு அருகே நேற்று பகலில் காட்டெருமை ஒன்று வலம் வந்தது. காண்போரை கதிகலங்க வைக்கும் கம்பீர நடையுடன் சாலையில் வந்த காட்டெருமை பொதுமக்களை மிரள வைத்தது.

தூக்கி வீசியதில் 2 பேர் காயம்

காட்டெருமையை கண்ட பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிறிதுநேரத்தில் ஆக்ரோஷம் அடைந்த காட்டெருமை, சாலையில் அங்கும் இங்குமாக ஓடியது.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கொடைக்கானல் வில்பட்டியை சேர்ந்த கைலாசம் (வயது 70) என்பவரை காட்டெருமை கொம்பால் முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

பின்னர் அந்த காட்டெருமை, அருகே உள்ள தனியார் காம்பவுண்டுக்குள் புகுந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், அங்கிருந்து காட்டெருமையை விரட்டினர். இதனால் மீண்டும் காட்டெருமை 7 ரோடு சந்திப்பு சாலைக்கு வந்து விட்டது. அங்குள்ள தனியார் ஓட்டலின் முன்பு நின்று கொண்டிருந்த டிரைவர் ரவிச்சந்திரன் (55) என்பவரை முட்டி தூக்கியது. இதில் ரவிச்சந்திரன் படுகாயம் அடைந்தார்.

சமூக வலைத்தளங்களில் வைரல்

காட்டெருமை தூக்கி வீசியதில் காயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே காட்டெருமை ஆக்ரோஷமாக முட்டி தூக்கி வீசும் காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. நெஞ்சை பதை பதைக்க செய்யும் அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடரும் அவலம்

கொடைக்கானல் நகரில் காட்டெருமைகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொடைக்கானலில் தொடரும் அவலத்தை தடுக்க வனத்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

எனவே வனப்பகுதியில் இருந்து நகர்ப்பகுதிக்குள் காட்டெருமைகள் நுழைவதை நிரந்தரமாக தடுக்கும் வகையில், சோலார் மின்வேலி அமைக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story