திருச்செந்தூர் கோவிலில்செல்போன் பாதுகாப்பு அறை: அமைச்சர் சேகர்பாபு திறந்துவைத்தார்


தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பாதுகாப்பு அறையை அமைச்சர் சேகர்பாபு வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை உத்தரவு நேற்று அமலுக்கு வந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் செல்போன் பாதுகாப்பு அறையை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

செல்போன் பாதுகாப்பு பெட்டக அறை

கோவில்களில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இது நேற்றுமுதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி, திருச்செந்தூர் கோவிலில் கணினிமயமாக்கப்பட்ட செல்போன் பாதுகாப்பு பெட்டக அறை அமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கி, செல்போன் பாதுகாப்பு பெட்டக அறையை திறந்து வைத்தார். முன்னதாக கோவிலில் உபயதாரர் சார்பில் ரூ.3.20 லட்சம் மதிப்பில் தங்கத்தேர் பராமரிப்பு பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் இருந்து முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளை கோவிலுக்கு 4 மினி வேன்களில் அழைத்து வரும் சேவையை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பெருந்திட்ட வளாக பணிகள் ஆய்வு

மேலும் கோவில் வளாகத்தில் ரூ.300 கோடியில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாக பணிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சரவணபொய்கையில் யானை குளியல் தொட்டி அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

கோவிலில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 10 பணியாளர்களுக்கு சான்றிதழ், ரொக்கப்பணம் வழங்கினார். கோவில் அன்னதானக்கூடத்தினை பார்வையிட்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறிய அமைச்சர், பின்னர் பக்தர்களுடன் சேர்ந்து அன்னதானம் ருசித்து சாப்பிட்டார்.

தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

2 ஆண்டுகளுக்குள் பணிகள் நிறைவு

தமிழகத்தில் பக்தர்கள் அதிகமாக வரக்கூடிய கோவில்களுக்கு அடுத்த 100 ஆண்டுகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை தொலைநோக்கு பார்வையுடன் செய்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி முதல்கட்டமாக 10 கோவில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் கோவிலில் தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி மற்றும் எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி என மொத்தம் ரூ.300 கோடியில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல்கட்டமாக 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி, துணை மின்நிலையம், நிர்வாக அலுவலகம் போன்ற 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அடுத்தகட்டமாக மேலும் 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பணிகள் தொடங்கப்படும். வருகிற பிப்ரவரி மாதம் 3-ந்தேதி சுவாமி சன்னதியைச் சுற்றிலும் ரூ.16 கோடியில் திருப்பணிகள் தொடங்கப்படும். 2 ஆண்டுகளுக்குள் பெருந்திட்ட பணிகள் முழுமையாக நிறைவு பெறும்.

செல்போனுக்கு ரூ.5 கட்டணம்

ஏற்கனவே கட்டப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதி வருகிற அக்டோபர் மாதம் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளது. பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

கணினிமயமாக்கப்பட்ட செல்போன் பாதுகாப்பு பெட்டக அறையில் ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கான பதிவு சீட்டில் உரியவரின் புகைப்படம் பதிவிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர் கணேசன், இணை ஆணையர் கார்த்திக், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி,

தாசில்தார் சுவாமிநாதன், நகராட்சி ஆணையாளர் வேலவன், துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், கவுன்சிலர் செந்தில்குமார், தூத்துக்குடி மண்டல துணை ஆணையர் வெங்கடேஷ், அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், கோவில் விடுதி மேலாளர் சிவநாதன், செயற்பொறியாளர் அழகர்சாமி, இளநிலை பொறியாளர் சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story