திருப்பனந்தாளில், விவசாயிகள் கரும்புடன் ஆர்ப்பாட்டம்
திருப்பனந்தாளில், விவசாயிகள் கரும்புடன் ஆர்ப்பாட்டம்
பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கக்கோரி திருப்பனந்தாளில் விவசாயிகள் கரும்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கக்கோரி திருப்பனந்தாள் அருகே அணைக்கரை வாரச்சந்தை பகுதியில் நேற்று திரளான விவசாயிகள் கையில் கரும்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. தஞ்சை வடக்கு மாவட்ட துணை தலைவர் உத்திராபதி தலைமை தாங்கினார். உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ.ஆலயமணி, அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கருணாநிதி, அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாவட்ட துணை செயலாளர் துரை அருட்செல்வன், பா.ம.க. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ஜோதிராஜ், பா.ஜ.க. ஒன்றிய தலைவர் மணிமாறன், தே.மு.தி.க. தஞ்சை வடக்குமாவட்ட செயலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
கரும்பு வழங்க வேண்டும்
தமிழக அரசு பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூபாய் ஆயிரம் ஆகியவை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கவில்லை. எனவே முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட்டு, பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
மாநிலம் தழுவிய போராட்டம்
அணைக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சுமார் நூறு ஏக்கர் பரப்பிலான கரும்புகள் வீணாகி கரும்பு விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்காவிட்டால் கரும்பு விவசாயிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினருடன் இணைந்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என உழவர் பேரியக்க மாநில தலைவர் கூறினார்.