திருவாரூரில், தி.மு.க. இளைஞரணியினர் உண்ணாவிரதம்


திருவாரூரில், தி.மு.க. இளைஞரணியினர் உண்ணாவிரதம்
x

திருவாரூரில், தி.மு.க. இளைஞரணியினர் உண்ணாவிரதம்

திருவாரூர்

நீட் தேர்வை கண்டித்து திருவாரூரில் தி.மு.க. இளைஞரணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பூண்டிகலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர்.

உண்ணாவிரதம்

தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி சார்பில் மாணவர்களின் தற்கொலைக்கு காரணமாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், நீட் தேர்விற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் தமிழக கவர்னரை கண்டித்தும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடைபெறும் என்று தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி திருவாரூர் புதிய ரெயில் நிலையம் எதிரே மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பூண்டி கலைவாணன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை தொழில்துறை அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி. ராஜா தொடங்கி வைத்தார்.

அனுமதிக்க மாட்டோம்

பின்னர் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசுகையில், இந்தியாவில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களில் 50 சதவீதம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தமிழக மாணவிகளை பாதிக்கும் நீட் தேர்வை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

ஓயாது போராட்டம்

பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. பேசுகையில், நீட் தேர்வை இந்த மண்ணில் இருந்து அகற்றும் வரை ஓயாது போராட்டம் நடத்துவோம் என்றார். இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா, மாவட்ட அமைப்பாளர் பனங்குடி குமார், நகர செயலாளர் வாரை பிரகாஷ், ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா, பொதுக்குழு உறுப்பினர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story