திருவாரூரில், பருத்தி மூட்டைகளுடன் விடிய, விடிய காத்திருந்த விவசாயிகள்


திருவாரூரில், பருத்தி மூட்டைகளுடன் விடிய, விடிய காத்திருந்த விவசாயிகள்
x
தினத்தந்தி 9 July 2023 7:30 PM GMT (Updated: 10 July 2023 9:04 AM GMT)

வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறக்க தாமதமானதால் திருவாரூரில் பருத்தி மூட்டைகளுடன் விவசாயிகள் விடிய, விடிய காத்திருந்தனர். பருத்தி மூட்டைகளுடன் வாகனங்கள் 2 கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.

திருவாரூர்

பருத்தி சாகுபடி

திருவாரூர் மாவட்டத்தில் கோடை சாகுபடியாக இந்த ஆண்டு 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி மேற்கொண்டனர். பருத்தி சாகுபடி தொடங்கியதுமே பருவம் தவறி மழை பெய்தது. மாறுபட்ட இயற்கை சூழலால் பருத்தி பயிர்கள் பாதிக்கப்பட்டன.

இயற்கை இடர்பாடுகளை சமாளித்து விவசாயிகள் பருத்தி பயிரை பராமரித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பருத்தி அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. இதில் கிடைக்கும் பருத்தியை விவசாயிகள் திருவாரூரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் விடப்பட்டு வருகிறது.

விடிய, விடிய காத்திருப்பு

இந்த ஏலத்தில் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் கலந்து கொண்டு பருத்தியை வாங்கி செல்கிறார்கள். நாளை (செவ்வாய்க்கிழமை) திருவாரூர் ேவளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு திருவாரூர் அருகே உள்ள மாங்குடி, மாவூர், கொரடாச்சேரி, கமலாபுரம், அத்திப்புலியூர், அடியக்கமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நேற்று முன்தினம் இரவு முதலே தாங்கள் விளைவித்த பருத்தியை டிராக்டர், சரக்கு வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்த வண்ணம் இருந்தனர்.

திறப்பதில் தாமதம்

ஆனால் திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கதவு திறக்கப்படவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் பருத்தி மூட்டைகளுடன் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய காத்திருக்க நேரிட்டது.

பருத்தி மூட்டைகளை ஏற்றி வந்த வாகனங்கள் அங்கு உள்ள திருவாரூர்- நாகை தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து புலிவலம் வாளவாய்க்கால் ரவுண்டானா வரை 2 கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.

காக்க வைக்காமல்...

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'விவசாயிகளை காக்க வைக்காமல் முன்கூட்டியே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறந்து வைத்து பருத்தியை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது நீண்ட நேரம் காத்திருப்பதால் வாகனங்களுக்கு இரட்டை வாடகை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இயற்கை இடர்பாடுகளால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு மீண்டும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


Next Story