தூத்துக்குடியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசிய 3 பேர் கைது


தூத்துக்குடியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 Sep 2023 6:45 PM GMT (Updated: 12 Sep 2023 6:45 PM GMT)

தூத்துக்குடியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசியது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மண்எண்ணெய் குண்டு வீச்சு

தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 38). மீனவர். இவர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியாக உள்ளார். இவரது அண்ணன் பீட்டர் (48). இவர்களது வீடு அடுத்தடுத்து உள்ளது.

சம்பவத்தன்று நள்ளிரவில் பீட்டர், பாஸ்கர் ஆகிய 2 பேரின் வீட்டு வாசல்களிலும் மர்மநபர்கள் மண்எண்ணெய் குண்டுகளை வீசினர். இதில் அவை வெடித்து சிதறி தீப்பிடித்ததில், அங்கு கிடந்த மீன்பிடி வலைகள் எரிந்து சேதம் அடைந்தன. பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

3 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பகுதியில் சம்பவத்தன்று மதியம் பீட்டரின் மகன் ஜார்ஜுக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விரோதத்தில் பீட்டர், பாஸ்கர் ஆகியோரின் வீட்டு வாசலில் மண்எண்ணெய் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த நரேஸ் (19), ஜெய்சன் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story