தூத்துக்குடியில் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்


தூத்துக்குடியில் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
x
தினத்தந்தி 12 Sep 2023 6:45 PM GMT (Updated: 12 Sep 2023 6:45 PM GMT)

தூத்துக்குடியில் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது.

கருத்தரங்கம்

உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மனநல மருத்துவச்சங்கம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மனநல மருத்துவ சங்கம் ஆகியவை இணைந்து, மக்களை தேடி மனநல மருத்துவம் என்ற தலைப்பில் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் நடத்தியது. கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் ஜெசி பர்ணான்டோ தலைமை தாங்கினார். தமிழ்நாடு மனநல மருத்துவச் சங்க மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் சிவசைலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் அப்துல்ரகுமான், ஸ்ரீராம், வெங்கடேச பெருமாள், அருண்செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். கருத்தரங்கில் மாணவிகளின் கேள்விகளுக்கு மருத்துவர்கள் பதில்கள் அளித்தனர். இக்கருத்தரங்கில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு

இது குறித்து தமிழ்நாடு மனநல மருத்துவச் சங்க மாநிலத் தலைவர் கூறுகையில், இந்தியாவில், நொடிக்கு 40 பேர் இறக்கின்றனர். ஒரு நாளில் 495 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதில், 35 பேர் மாணவர்களாக உள்ளனர். மேலும், கடந்த 2017-ம் ஆண்டு தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கை 9 சதவீதமாக இருந்தது. கடந்த 2022-ம் ஆண்டு 13.3 சதவீதமாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக 13 முதல் 29 வயதுக்கு உபட்டவர்கள் அதிகமாக தற்கொலை செய்துகொள்ளும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றும் வகையில் இந்த கருத்தரங்குகள் மாணவ-மாணவிகள் மத்தியில் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் உயிரிழப்புகளை தடுக்க அரசுக்கு உதவியாக இருக்கும். தற்கொலையை தடுக்க அரசும் பல்வேறு முகாம்களை நடத்தி வருகிறது. ஆனாலும், மக்களைத் தேடி மனநல மருத்துவம் மூலம் பொதுமக்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.


Next Story