தூத்துக்குடி மாவட்டத்தில், வருகிற 8-ந் தேதி கூட்டுறவு சங்கங்களில் கடன் மேளா


தூத்துக்குடி மாவட்டத்தில், வருகிற 8-ந் தேதி கூட்டுறவு சங்கங்களில் கடன் மேளா நடைபெற உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை மேளா வருகிற 8-ந் தேதி நடக்கிறது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கடன்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் மாற்றுத்திறனாளிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில், டாம்கோ, டாப்செட்கோ கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் கடனை பொறுத்தமட்டில் உரிய தவணைக்குள் செலுத்தும் பட்சத்தில் கடனுக்கான வட்டி தொகை முழுவதும் தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் பெறப்பட்டு கடன்தாரர்களது கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்படும், மகளிர்சுயஉதவிக்குழுக்கடன்கள் மற்றும் டாம்கோ, டாப்செட்கோ கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

உறுப்பினர் சேர்க்கை

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா வருகிற 8-ந் தேதி அனைத்து சங்க வளாகத்திலும், மகளிர் சுய உதவிக்குழு கடன் மேளா வருகிற 19-ந் தேதியும், டாம்கோ, டாப்செட்கோ கடன் 30-ந் தேதியும் நடக்கிறது. எனவே பொதுமக்கள், உறுப்பினர்கள் முகாம் நாட்களில் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அனுகி விண்ணப்பத்தை பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து கடன் பெறலாம். அதே போன்று கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக இல்லாதவர்கள் மேற்கண்ட முகாம் நாட்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் பெற்று ரூ.100 பங்குத்தொகையும், ரூ.10 நுழைவுக்கட்டணமும் செலுத்தி கூட்டுறவுசங்கங்களில் உறுப்பினராக சேரலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story