தூத்துக்குடி மாவட்டத்தில்சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து விவசாயிகளுக்கு பயிற்சி; கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்


தூத்துக்குடி மாவட்டத்தில்சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து விவசாயிகளுக்கு பயிற்சி; கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 9 Aug 2023 6:45 PM GMT (Updated: 9 Aug 2023 6:45 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனறு கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று கண்காணிப்பு குழு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

கண்காணிப்பு குழு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகள் ஆன்லைனில் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். கிராம அளவில் உழவர் கடன் அட்டை பெறாத விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி விண்ணப்பங்களை பெற்று வங்கியில் ஒப்படைத்து, விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் ஆட்சிமன்ற குழுக் கூட்டம் நடத்தப்பட்டு திட்ட செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது. வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் மற்றும் மாவட்ட விவசாயிகள் குழு கூட்டம் முறையாக நடைபெறுவது மற்றும் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்கள் திட்டமிடப்படுகிறதா? என்பன குறித்தும், பயிற்சிகள் மற்றும் சுற்றுலாக்களின் போது பனை, வாழை, சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் வழங்கிடவும் மாவட்டத்தில் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக செயல்பட மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், கலெக்டர் கூறுகையில், நீர் வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டப் பணிகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட நீர்வடிப்பகுதி குழு தலைவர், பஞ்சாயத்து தலைவர்கள் மூலமாகவே செயல்படுத்தப்பட வேண்டும், என்றார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின் ராணி, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் சுந்தர்ராஜன், வேளாண்மை பொறிறியியல் துறை செயற்பொறியாளர் கிளாட்வின் இஸ்ரேல், வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) சாந்திராணி மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சிநிலையம்) மனோரஞ்சிதம், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு, நபார்டு உதவி பொதுமேலாளர் சுரேஷ் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story