தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மனு
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடியில் 2018-ம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 16 பேர் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தனர். அவர்கள் கலெக்டர் செந்தில்ராஜிடம் கோரிக்கை மனுகொடுத்தனர். அந்த மனுவில், கடந்த 4 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலைவாய்ப்பு இல்லாமல் முடங்கி உள்ளோம். காற்று மாசுக்கும், ஆலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆலையை திறந்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஸ்டெர்லைட் நிர்வாகம் படிப்புக்கு உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. உலக நாடுகளில் காப்பர் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும், தூத்துக்குடி மக்கள் இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.