தூத்துக்குடியில் புதன்கிழமை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை


தூத்துக்குடியில் புதன்கிழமை முதல்   மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 5 Dec 2022 6:45 PM GMT)

வங்காளவிரிகுடா கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதால், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் புதன்கிழமை முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

தூத்துக்குடி

வங்காளவிரிகுடா கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதால், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் புதன்கிழமை முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

காற்றழுத்த தாழ்வு பகுதி

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து வருகிற 8-ந் தேதி காலை வடதமிழகம்-புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகில் வந்தடையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

சூறாவளி காற்று

அதே போன்று சென்னை வானிலை ஆய்வு மையம், நாளை (புதன்கிழமை) தென்மேற்கு அதனை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 08.12.22 அன்று தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளது.

செல்ல வேண்டாம்

ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் நாளை (புதன்கிழமை) முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தூத்துக்குடி மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த அறிவிப்பு மாவட்டம் முழுவதும் உள்ள கடலோர கிராமங்களில் மீனவ மக்களிடம் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆங்காங்கே ஒலி பெருக்கி மூலமாகவும் மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளன.

அதே போன்று ஏற்கனவே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் விரைவாக கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


Next Story