தூத்துக்குடியில், புதன்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம்: கலெக்டர் செந்தில்ராஜ்


தூத்துக்குடியில், புதன்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம்: கலெக்டர் செந்தில்ராஜ்
x
தினத்தந்தி 1 Nov 2022 6:45 PM GMT (Updated: 1 Nov 2022 6:45 PM GMT)

தூத்துக்குடியில், திருச்செந்தூர் ரவுண்டானா பகுதியில் புதன்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில், திருச்செந்தூர் ரவுண்டானா மேம்பாலத்தில் ராட்சத காங்கிரீட் தூண்கள் பொருத்தும் பணி இன்று (புதன்கிழமை) தொடங்குவதால் போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மேம்பாலம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், திருச்செந்தூர் ரோடு ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சாலை பணிகள் முடிக்கப்பட்டு மத்தியில் 32 ராட்சத காங்கிரீட் தூண்கள் அதற்கான டத்தில் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த பணி மிகவும் முக்கியமான பணி ஆகும். மிகுந்த கவனமுடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகள் அனைத்து முடிந்து பிப்ரவரி 2023 மாதம் பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் காங்கிரீட் தூண்களை பொருத்தும் பணிகள் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 11-ந் தேதி வரை நடக்கிறது.

போக்குவரத்து மாற்றம்

இந்த பணி காரணமாக போக்குவரத்து மாற்றப்படுகிறது. இன்று முதல் வருகிற 6-ந் தேதி வரை பாலத்தின் வடக்கு புறத்தில் வேலை நடக்கிறது. இதனால் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலிருந்து வரும் ரெயில்வே மேம்பாலம் வழி அடைக்கப்படுகிறது. ஆகையால் வாகனங்கள் காமராஜ் கல்லூரி சாலை வழியாக திருச்செந்தூர் ரவுண்டானா (பாலம் கட்டப்படும் இடத்திற்கு) வரும் அனைத்து வாகனங்களும் மாற்று வழியாக பீச் ரோடு, ரோச் பூங்கா வழியாக துறைமுக சபை விருந்தினர் விடுதி, ஸ்பிக், டாக் இணைப்புச் சாலை வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையை அடையலாம். மதுரையிலிருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மற்றும் திருச்செந்தூர் செல்லும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டின் வழியாக செல்ல வழி வகை செய்யப்பட்டு உள்ளது. திருச்செந்தூரிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் (மதுரை மற்றும் நெல்லை செல்லும் வாகனங்கள்) பாலத்தின் தெற்கு பகுதியில் ஏற்கனவே உள்ள சர்வீஸ் ரோட்டை பயன்படுத்தி கொள்ளலாம். திருச்செந்தூரிலிருந்து வ.உ.சி. துறைமுகத்திற்கு செல்லும் வாகனங்கள் ஸ்பிக், டாக் துறைமுக சபை விருந்தினர் இல்லம் வழியாக செல்ல வேண்டும்.

7-ந் தேதி

வருகிற 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பாலத்தின் தெற்கு பகுதியில் ராட்சத காங்கிரீட் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெறும். அப்போது, திருச்செந்தூரிலிருந்து வ.உ.சி. துறைமுகத்திற்கு செல்லும் வாகனங்கள் ஸ்பிக், டாக், துறைமுக சபை விருந்தினர் இல்லம் வழியாக செல்ல வேண்டும். தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலிருந்து வரும் ரெயில்வே மேம்பாலம் வழியாக வரும் வாகனங்கள் திருச்செந்தூர் ரவுண்டானா (பாலம் கட்டப்படும் இடத்திற்கு) வரும் அனைத்து வாகனங்களும் மாற்று வழியாக பீச் ரோடு, ரோச் பூங்கா வழியாக துறைமுக சபை விருந்தினர் விடுதி, ஸ்பிக், டாக் இணைப்புச் சாலை வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையை அடையலாம். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக சபையிலிருந்து பாலத்தை கடந்து செல்லவரும் அனைத்து வாகனங்களும் பாலத்தின் வடக்கு புறத்தினைபயன்படுத்தி மதுரைமற்றும் நெல்லை சாலைக்கும் செல்லலாம். மதுரையிலிருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் மற்றும் திருச்செந்தூர் செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் பாலத்தின் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தெற்கு பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டை பயன்படுத்தி செல்ல வழி வகை செய்யப்பட்டு உள்ளது. திருச்செந்தூரிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் (மதுரை மற்றும் நெல்லை மார்க்கமாக செல்லும் வாகனங்கள்) பாலத்தின் தெற்கு பகுதியில் ஏற்கனவே உள்ள சாலையை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஒத்துழைப்பு

இந்த மேம்பாலம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டும் நிலையில் உள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்படி மாற்று வழியை பயன்படுத்தியும், மேம்பாலப் பணிகள் நடைபெறும் இடத்தை அடைவதை தவிர்த்து தேவையற்ற வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடிகளை ஏற்படுத்தாமல் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story