தூத்துக்குடியில் மூதாட்டி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசிய 4 பேர் கைது
தூத்துக்குடியில் மூதாட்டி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசிய 4 பேர் கைது
தூத்துக்குடியில் மூதாட்டி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மண்எண்ணெய் குண்டு வீச்சு
தூத்துக்குடி மட்டக்கடையைச் சேர்ந்தவர் ஜெயசேகரன். இவருடைய மனைவி ஜான்சி (வயது 67). இவரது வீட்டின் முன்பு நேற்று முன்தினம் மர்மநபர்கள் திடீரென்று மண்எண்ணெய் குண்டை வீசி விட்டு தப்பி சென்றனர்.
இதில் அவரது வீட்டின் கதவு எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது
விசாரணையில், தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் அருண்குமார் (22), தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தை சேர்ந்த ராஜா மகன் விக்னேஷ் (20), தூத்துக்குடி சங்கரபேரியைச் சேர்ந்த கலைமணி மகன் உதயகுமார் (25), தாளமுத்துநகர் குமரன்நகரைச் சேர்ந்த முருகன் மகன் சரவணகுமார் (27) ஆகிய 4 பேரும் சேர்ந்து மண்எண்ணெய் குண்டு வீசியது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள், அந்த பகுதியில் இருந்த தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஒருவரது வீட்டில் மண்எண்ெணய் குண்டு வீசுவதற்கு பதிலாக, அருகில் உள்ள ஜான்சி வீட்டில் மாற்றி வீசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.