தூத்துக்குடியில்60 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை 60 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
தூத்துக்குடியில் நேற்று 62 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இதில் பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்யப்பட்ட 2 சிலைகளை கடலில் கரைக்க போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். மற்ற சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி
தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டன. வழிபாடு முடித்த பிறகு சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களாக ஒவ்வொரு பகுதியாக விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன. நேற்று தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த 62 விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி சார்பில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த 50 விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக தபசு மண்டபம் அருகே கொண்டு வரப்பட்டன. அந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் ரதவீதிகளில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. பின்னர் விநாயகர் சிலை ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
கரைப்பு
நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் என்.சிவக்குமார், பி.மாரியப்பன், செயலாளர்கள் சரவணக்குமார், ராகவேந்திரா, எஸ்.பி.சிவலிங்கம், மாவட்ட அமைப்பாளர் நாராயணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவனடி சாஸ்தா கோவில் நிர்வாகி வானதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக இந்து வியாபாரிகள் நலச்சங்கம் மாநில செயலாளர் எம்.ஜெகன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். ஜில்லா சங்க சாலக் சீத்தாராமன், சேவாபாரதி மாநில துணைத்தலைவர் வெண்ணிமாலை, பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து ஊர்வலம் வடக்கு ரதவீதி, காசுக்கடை பஜார், மட்டக்கடை, பீச் ரோடு வழியாக திரேஸ்புரம் சங்குமுக கடற்கரையை வந்தடைந்தது. அங்கு விநாயகர் சிலைகள் படகுகள் மூலம் கடலுக்குள் எடுத்து சென்று கரைக்கப்பட்டன.
போலீசார் அனுமதி மறுப்பு
இதில் 2 விநாயகர் சிலைகள் பிளாஸ்டர் ஆப் பாரீசால் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சிலைகளை கடலில் கரைக்க போலீசார் அனுமதி மறுத்தனர். பின்னர் 2 சிலைகளும் விளாத்திகுளம் அருகே உள்ள கல்குவாரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்று கரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் இந்து மக்கள் கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 14 விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்து சென்று தூத்துக்குடி கடலில் கரைக்கப்பட்டன.
பாதுகாப்பு
தூத்துக்குடியில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.