தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு


தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் குண்டு வீசிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் குண்டு வீசிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

பெட்ரோல் குண்டு

தூத்துக்குடி அண்ணாநகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் தனபாண்டியன். மர வியாபாரி. இவரது மகன் செல்வகணேஷ் (வயது 24). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது நள்ளிரவில் முகமூடி அணிந்த 3 மர்மநபர்கள் அரிவாள் மற்றும் பெட்ரோல் குண்டுடன் வந்து உள்ளனர். அவர்கள் செல்வகணேஷ் வீட்டின் முன்பு நின்ற மோட்டார் சைக்கிளை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி உள்ளனர். பின்னர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வெடித்த சத்தம் கேட்டு செல்வகணேஷ் குடும்பத்தினர் வெளியில் வந்து பார்த்து உள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் மோட்டார் சைக்கிளின் ஒருபகுதி சேதம் அடைந்தது.

கைது

இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்தனர். அவர்கள் தூத்துக்குடி டி.எம்.பி. காலனி 4-வது தெருவை சேரந்த மாரியப்பன் மகன் மாடசாமி (வயது 26), மாடசாமி மகன் சுப்புராஜ் (23), அண்ணாநகரை சேர்ந்த கணேசன் மகன் சுப்புராஜ் (21) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், செல்வகணேசுக்கும், மாடசாமிக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மாடசாமி, நண்பர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் குண்டு வீசி இருப்பது தெரியவந்தது. இதனால் மாடசாமி, மா.சுப்புராஜ், க.சுப்புராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.


Next Story