தூத்துக்குடியில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 July 2023 6:45 PM GMT (Updated: 21 July 2023 11:18 AM GMT)

தூத்துக்குடியில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க அரசைக் கண்டித்தும், அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதை கண்டித்தும் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டு உள்ளார். அதன்படி தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ ஆகியோர் தலைமை தாங்கி பேசினர்.

குடிநீர் திட்டம்

ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பேசுகையில், தி.மு.க.வினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்து விட்டனர். அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ரூ.1000 தருவதாக கூறினார்கள். தற்போது தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு தருவதாக கூறுகிறார்கள். வீட்டுவரி, தண்ணீர் வரி, மின்கட்டணம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து விட்டது. மாணவர்களுக்கு கல்விக்கடன் ரத்து என்றார்கள். ஆனால் கடன் ரத்து செய்யப்படவில்லை.

தமிழகத்தில் தி.மு.க.வினர் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனை தட்டிக் கேட்பவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். இதனை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்கியது அ.தி.மு.க.தான். ஆகையால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கூறினார்.

கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ

ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. யாரும் நிம்மதியாக வாழ முடியவில்லை. விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்து விட்டது. இதனால் பொதுமக்களுக்காக அ.தி.மு.க. போராடுகிறது. அ.தி.மு.க. பொற்கால ஆட்சியை கொடுத்தது. தற்போது மக்கள் எப்போது தேர்தல் வரும் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியையும், ஊழலையும் பிரிக்க முடியாது. அமைச்சர்கள் கோட்டைக்கு வரவே பயப்படுகிறார்கள். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வந்து விடும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அவைத் தலைவர்கள் வக்கீல் திருப்பாற்கடல், என்.கே.பெருமாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சுதாகர், முன்னாள் நகர மன்றத்தலைவர் இரா.ஹென்றி, தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், டேக் ராஜா, பில்லா விக்னேஷ், கே.ஜெ.பிரபாகர், தனராஜ், திருமணவேல், டார்சன், சுதர்சன்ராஜா, அய்யனடைப்பு ராஜேந்திரன், ஜாக்சன்துரைமணி, பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், நட்டார்முத்து, முன்னாள் அரசு வக்கீல் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ரூ மணி, வக்கீல் பிரிவு செயலாளர் யு.எஸ்.சேகர், இணை செயலாளர் ரவீந்திரன், திருச்செந்தூர் முன்னாள் ஒன்றிய பொருளாளர் பழக்கடை திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story