தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொய்யான தகவல்களை பரப்பி வரும் போராளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து எங்கள் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்தை மீட்டுத் தரவேண்டும் என்று கூறி உள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் மா.மச்சேந்திரன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், வாகைகுளம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எந்த இடங்கள், எவ்வளவு இடங்கள் கையகப்படுத்தப்படுகிறது என்ற விவரங்களை அந்த பகுதி நில உரிமையாளர்களுக்கு முறையாக தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
ஆழ்வார்திருநகரி அருகே உள்ள புறையூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், திருச்செந்தூரில் இருந்து புறையூர் வழியாக நாசரேத்துக்கு புதிய பஸ்சை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 01.06.2022 அன்று தொடங்கி வைத்தார். தினமும் மூன்று முறை இயக்கப்பட்ட இந்த பஸ் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால், அந்த பஸ்சை தற்போது நிறுத்திவிட்டார்கள். இந்த பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.