தூத்துக்குடியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) அனல் மின் நிலைய கிளைத் தலைவர் கென்னடி, தூத்துக்குடி மின் திட்ட கிளை திட்டத் தலைவர் மரியதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் கடந்த 22-2-2018 அன்று போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 6-1-1998 முதல் இன்று வரை பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும். காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி அடிப்படையில் நியமித்து நிரந்தரம் செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்வோம் என முதல்-அமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், ஒப்பந்த முறையை கைவிட்டு ஒப்பந்த பணியாளர்களுக்கு தினக்கூலியை அரசே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு நெல்லை மண்டலச் செயலாளர் எஸ்.அப்பாதுரை, மாநில துணைப் பொதுச் செயலாளர் பீர்முகமது ஷா, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு அனல் மின் நிலைய கிளைத் செயலாளர் கணபதி சுரேஷ், தூத்துக்குடி மின் திட்ட கிளை திட்ட செயலாளர் குன்னிமலையான், திட்ட பொருளாளர்கள் சுடலைமுத்து, ராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசனிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.