தூத்துக்குடியில்கூலித் தொழிலாளி கொலையில் 2 வாலிபர்கள் கைது
தூத்துக்குடியில் கூலித் தொழிலாளி கொலையில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி கூலித்தொழிலாளி கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர் கொன்றது ஏன்? என்று பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
கொலை
தூத்துக்குடி தாளமுத்து நகரில் இருந்து அய்யனார்புரம் செல்லும் வழியில் உப்பளங்கள் உள்ளன. இந்த உப்பளத்தில் நேற்று முன்தினம் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்தவரை அடையாளம் காண முடியாத நிலை நீடித்தது. இந்த நிலையில் கைரேகை நிபுணர்கள் இறந்தவரின் கைரேகையை வைத்து ஏற்கனவே பதிவு செய்து வைக்கப்பட்டு இருந்த கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்த போது, இறந்தவர் அடையாளம் தெரிந்தது. இறந்தவர் மீது ஏற்கனவே வழக்கு இருந்ததும் தெரியவந்தது.
கைது
கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி தாளமுத்துநகர் கணபதி நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி சிலுவை பாக்கியம் (வயது 47) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பட்டுராஜ் மகன் சண்முகவேல்ராஜா (30), பரமசிவன் மகன் கட்டிட தொழிலாளி ஜேசுராஜா (28) ஆகியோர் சேர்ந்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சிலுவை பாக்கியம், சண்முகவேல்ராஜா, ஜேசுராஜா ஆகிய 3 பேரும் அடிக்கடி ஒன்றாக சந்தித்து மது குடித்து வந்தார்களாம். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சண்முகவேல்ராஜாவின் தாயை பற்றி சிலுவை பாக்கியம் அவதூறாக பேசினாராம். இதில் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இந்த முன்விரோதம் காரணமாக சண்முகவேல்ராஜா, ஜேசுராஜா ஆகிய 2 பேரும் சேர்ந்து சிலுவைபாக்கியத்தை மதுகுடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று உள்ளனர். அங்கு உள்ள உப்பளத்தில் வைத்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றதாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.