தூத்துக்குடியில்தேசிய கடல் சாகச விளையாட்டு போட்டி தொடங்கியது: 130 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு


தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தேசிய கடல் சாகச விளையாட்டு போட்டி தொடங்கியது. இதில் 130 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. இதில் 130 வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

சாகச விளையாட்டு போட்டி

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இதில் நின்ற நிலையில் துடுப்பு செலுத்துதல், அமர்ந்த நிலையில் துடுப்பு செலுத்துதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் 7 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று திரும்பும் வகையில் நடத்தப்படுகிறது.

இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம், அரியானா, டெல்லி, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், சத்தீஸ்கர் உட்பட 13 மாநிலங்களில் இருந்தும், கடற்படை, கடலோர காவல்படை, இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்கள் என சுமார் 130 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

கனிமொழி எம்.பி.

இந்த போட்டிகள் தொடக்க விழா நேற்று காலையில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் தினேஷ்குமார், உதவி கலெக்டர் கவுரவ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கடல் சாகச விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் வீரர்-வீராங்கனைகள் சிறிய கயாக்கி படகில் வேகமாக சென்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். சிறந்த வீரர்கள் பரிசுகளை வென்றனர். இந்த போட்டியை ஏராளமானவர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

சர்வதேச போட்டி

இந்த போட்டிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை தொடர்ந்து நடக்கிறது. போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கும், பின்னர் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச கடல் சாகச விளையாட்டு போட்டிக்கும் தகுதி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தங்கப்பதக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு, 2-வது பரிசாக வெள்ளி பதக்கம், ரூ.7 ஆயிரம், 3-வது பரிசாக வெண்கல பதக்கம், ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

வகுப்பறை கட்டிடம்

முன்னதாக தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பில் 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' என்ற தலைப்பில், மாவட்ட கனிமவள நிதி ரூ.60 லட்சம் செலவில் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், என்.டி.பி.எல். நிறுவன சமூக பொறுப்பு நிதி ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் மேலூர் மாநகராட்சி பள்ளிக்கூடத்திலும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.


Next Story