தூத்துக்குடியில்கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த துடிசியா வலியுறுத்தல்
தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் உலக வங்கி அதிகாரிகளிடம் துடிசியா நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
சிறுதொழில் முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி அதிகாரிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரிகள், சென்னை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சிறுதொழில் சங்க நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கூட்டத்தில்தூத்துக்குடி மாவட்ட சிறு, குறு, தொழில் சங்கம் (துடிசியா) சார்பில் தலைவர் நேருபிரகாஷ், செயலாளர் ராஜ்செல்வின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுபொருள் உற்பத்தியில் முன்னோடியாக திகழும் கடலை மிட்டாய், மக்ரூன், வாழைக்காய் சிப்ஸ், அல்வா போன்ற உணவு பொருட்களை வெளிநாடுகளில் சந்தைபடுத்த வேண்டும். தூத்துக்குடியில் அதிகமாக விளையும் வாழைப் பழங்களை மதிப்பு கூட்ட வேண்டும். அதனை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை தெரிவிக்க வேண்டும்.
தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும். சரக்கு போக்குவரத்து விமான நிலையம் ஏற்படுத்த வேண்டும். குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்துக்கு தேவையான மூலப்பொருட்களை தூத்துக்குடி மாவட்டத்திலேயே தயாரிக்க வேண்டும். தூத்துக்குடியில் அமைய உள்ள பர்னிச்சர் பார்க்கில் சிறு மற்றும் குறு தொழில்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தூத்துக்குடி முதல் மதுரை வரை ஆறு வழிச்சாலை அமைக்க வேண்டும். இரண்டாம், மூன்றாம், தலைமுறை தொழில்களில் ஈடுபடுவதற்கு, வங்கி கடனில் வட்டி சலுகை மற்றும் வருமான வரியில் சலுகையும், தொழில் உரிமம் பெறுவதில் சுலபமான வழியை கையாள வேண்டும். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். அந்த கோரிக்கைகளை உலக வங்கி அதிகாரிகள் ஏற்றுக் கொண்டு, தக்க ஆவணம் செய்வதாக உறுதி அளித்தனர். தொடர்ந்து உலகவங்கி அதிகாரி ஜஸ்டின்ஹில்லை சந்தித்து தொழில் வளர்ச்சி குறித்து கலந்துரையாடினோம்.
இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட துடிசியா தலைவர் நேருபிரகாஷ் தெரிவித்து உள்ளார்.