கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்


கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
x

வாடிப்பட்டி பகுதியில் கனமழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மழையால் கண்மாய், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

மதுரை

வாடிப்பட்டி

வாடிப்பட்டி பகுதியில் கனமழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மழையால் கண்மாய், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கன மழை

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விராலிப்பட்டி ஊராட்சி கிழக்குதெருவில் சில்லோடை கால்வாய் இருந்தது. அது தற்போது தூர்ந்துபோய் ஆக்கிரமிப்பில் காணப்படுகிறது. இந்நிலையில் வாடிப்பட்டி பகுதியில் பெய்த மழையால் கால்வாய்க்குள் மழைநீர் செல்ல வழியில்லாதால் தெருக்கள் முழுவதும் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. பொதுமக்கள் அந்த நீரை இரவு முழுவதும் இறைத்து ஊற்றி வடிய செய்தனர்.

ஆனால் தெருவில் நிற்கும் தண்ணீர் இதுவரை வடியவில்லை. மேலும் நேற்று மீண்டும் பெய்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இரவில் தூங்கமுடியாமல் வேதனையடைந்து வருகின்றனர். எனவே சில்லோடை வாய்காலை தூர்வாரி அதில் தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்மாய்கள் நிரம்புகின்றன

வாடிப்பட்டி பகுதியில் குரங்குதோப்பு, சாணாம்பட்டி, குலசேகரன்கோட்டை, விராலிப்பட்டி, செம்மினிப்பட்டி, குட்லாடம்பட்டி, பூச்சம்பட்டி, சொக்கலிங்கபுரம், ஆண்டிபட்டி, தனிச்சியம், அய்யங்கோட்டை, நகரி, கட்டக்குளம், மேட்டுநீரேத்தான், தாதம்பட்டி, போடிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால் கண்மாய்கள், குளங்கள் நிரம்பி வருகின்றன. இதில் சாணாம்பட்டியில் எட்டிகுளம் கண்மாய் நிரம்பியதால் மறுகால் பாய்ந்து செல்கிறது. குலசேகரன்கோட்டை பொன்பெருமாள் மலையடிவாரத்தில் உள்ள கண்மாய், விராலிப்பட்டி கண்மாய், அய்யனார்கோவில் கண்மாய், பொட்டிகுளம் கண்மாய், குட்லாடம்பட்டியில் தாடகைநாச்சி கண்மாய், மேட்டுநீரேத்தான் உள்பட பல கண்மாய்கள், குளங்கள் நிரம்பி வருகின்றன.

இதில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட தாதம்பட்டி ஒட்டான்குளம் முழுவதும் நிரம்பியது. ஆனால் மறுகால் செல்ல வழியில்லை. இந்தநிலையில் கால்நடை ஆஸ்பத்திரியில் இருந்து வருவாய் அலுவலகம் வரை புதிதாக கட்டப்பட்ட மூடிய வடிகால்கள் உள்ளது. அந்த வடிகால் வழியாக வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்து வருகிறது. காரணம் மூடிய வடிகால் 1 ஆண்டுகளாக அகற்றப்படாமல் இருப்பதால் அதில் குப்பைகள், மண், பாலீதின் கழிவுகள் அடைத்துக்கொண்டு தண்ணீர் செல்ல வழியில்லாமல் இருப்பதால் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. எனவே போர்கால அடிப்படையில் மூடிய வடிகாலில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story