வால்பாறையில் கார் கண்ணாடிகளை உடைத்து காட்டு யானை அட்டகாசம்
வால்பாறையில் கார் கண்ணாடிகளை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்தது.
வால்பாறை
வால்பாறையில் கார் கண்ணாடிகளை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்தது.
காட்டு யானை புகுந்தது
வால்பாறை பகுதியில் இருந்த காட்டு யானைகள் கூட்டம் கோடைகாலம் காரணமாக கேரள வனப்பகுதிகளுக்கு சென்று விட்டது. இந்த நிலையில் ஒரு சில காட்டு யானைகள் மட்டும் வால்பாறை பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் இருக்கும் வனப்பகுதிகளை ஒட்டிய எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகின்றன. வால்பாறை அருகில் உள்ள மானாம்பள்ளி எஸ்டேட் பகுதியில் சுற்றித்திறிந்த காட்டு யானை மானாம்பள்ளி மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
கார் கண்ணாடிகள் சேதம்
அங்கு பெட்டி கடை நடத்தி வரும் காளிதாஸ் என்பவர் தனது வீட்டின் முன்னால் தனக்கு சொந்தமான காரை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அந்த காட்டு யானை காரை கீழே தள்ளியதோடு, கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்தும் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாடி வருவதால் எஸ்டேட் பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.