வால்பாறை தாலுகாவில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது


வால்பாறை தாலுகாவில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை தாலுகாவில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை தாலுகாவில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

கணக்கெடுப்பு பணி

வால்பாறை பகுதியில் உள்ள நகர் பகுதி உள்பட அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தமிழ் நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை உத்தரவின் பேரில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஆசிரியர் பயிற்றுனர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிக் கூடங்களின் தலைமைஆசிரியர்கள் உதவியுடன் ஒவ்வொரு வீடாக சென்று பள்ளி செல்லும் வயதில் உள்ள பள்ளிக் குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி பிள்ளைகளை தவறாமல் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் சலுகைகள், கல்வி உதவித்தொகை, இலவச பாடப்புத்தகம், இலவச சீருடை, காலனி, வேலை வாய்ப்பு வசதிகள், போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவதற்காக வழங்கப்படும் இலவச பயிற்சி உள்ளிட்ட தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் சலுகைகள் உதவிகள் குறித்தும் பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறி தங்களது குழந்தைகளை தவறாமல் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

பெயர்கள் பதிவு

வால்பாறை அருகில் உள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதிக்கு தேயிலை தோட்ட பணிகளை செய்வதற்காக மத்திய பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்திருந்த தொழிலாளர்களின் குழந்தைகளை நல்லகாத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரஞ்சித்குமார் தலைமையில் சென்ற அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள் சுகந்தி, பிரபா ஆகியோர் பிள்ளைகளை கட்டாயம் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டு அவர்களின் பிள்ளைகளின் பெயர்களை பதிவு செய்தனர்.

ஏற்கனவே வால்பாறை பகுதியில் உள்ள 85 பள்ளிக்கூடங்களில் குறைந்தளவே மாணவ -மாணவிகள் படித்து வரும் நிலையில் இந்த பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மூலம் வெளி மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட தமிழக குழந்தைகளும் வரும் கல்வி ஆண்டில் பள்ளிக்கூடங்களில் சேருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


Next Story