வேப்பூரில் வழிப்பறியில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் கைது
வேப்பூரில் வழிப்பறியில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வேப்பூர்,
சிறுபாக்கம் போலீ்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார், நேற்றுமுன்தினம் கடலூர் - சேலம் சாலையில் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் மறித்தனர். போலீசாரை பார்த்ததும், அவர்கள் நிற்காமல் சென்றனர். இதையடுத்து போலீசார், அவர்களை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த புக்கிரவாரி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என்பதும், இவர்கள் அதே பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருபவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் வேப்பூரில் கொளஞ்சியம்மாள் என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இவர்கள் இதேபோல் கடந்த சில மாதங்களாக கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் செல்போன், டிராக்டர் பேட்டரி, இரும்பு பொருட்களை திருடி விற்றதும் தெரிந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, 3 மாணவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.