வேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி பணி தீவிரம்


வேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி பணி தீவிரம்
x
தினத்தந்தி 13 March 2023 6:45 PM GMT (Updated: 13 March 2023 6:46 PM GMT)

வெயில் சுட்டெரிப்பதால் வேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வெயில் சுட்டெரிப்பதால் வேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

9 ஆயிரம் ஏக்கர்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடிநெல்வயல், கோடியக்காடு பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தூத்துகுடிக்கு அடுத்து உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது. வேதாரண்யத்தில் ஆண்டு தோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

உப்பு உற்பத்தி பணி தீவிரம்

இந்த பகுதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டு செப்டம்பர் மாதம் வரை நடைபெறும். இந்த நிலையில்

கடந்த மாதம் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

தற்போது வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தியாளர்கள் முழுவீச்சில் உற்பத்தி பணியை தொடங்கி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்றுமதி

உற்பத்தி செய்யப்படும் உப்பை சேமித்து வைத்து சிறு, சிறு பாக்கெட்டுகளாக போட்டு விற்பனைக்காக அனுப்பிய நிலையில் நாகை மாவட்ட நிர்வாகம் அயோடின் கலந்த உப்பு மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என அறிவித்ததால் உப்பு ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஒருவாரமாக உப்பு தேக்கநிலை ஏற்பட்டுள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.தற்போது மீண்டும் உப்பு ஏற்றுமதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி இலக்கை எட்ட இரவு, பகலாக உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story